13,000 சிறுவர்கள் பலி : பலர் அழக்கூட சக்தி இல்லாத அளவுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு


காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 81 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 116 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இந்தக் காலப்பிரிவில் எட்டு படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியது.

இதன்படி கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 31,726 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 73,792 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சுமார் 8,000 பேர் காணாமல்போயிருப்பதாக நம்பப்படும் நிலையில் இவர்கள் உயிரிழந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கொல்லப்பட்ட பலஸ்தீனர்களில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் காசாவில் இஸ்ரேல் 13,000க்கும் அதிகமான சிறுவர்களை கொன்றிருப்பதாகவும் மேலும் பலர் அழக்கூட சக்தி இல்லாத அளவுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சிறுவர்கள் நிதியமான யுனிசெப் குறிப்பிட்டுள்ளது.

‘மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் அல்லது அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. அவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம். உலகில் வேறு எந்த மோதலிலும் இந்த அளவு சிறுவர்களின் உயிரிழப்பை நாம் கண்டதில்லை’ என்று யுனிசெப் பணிப்பாளர் நாயகம் கெதரின் ரசல், சி.பி.எஸ். நியுஸ் தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஹமாஸுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் உளவுப் பிரிவான மொசாட் தலைவரின் தலைமையில் இஸ்ரேலிய தூதுக் குழு ஒன்று கட்டார் சென்றிருக்கும் நிலையில் இந்தப் பேச்சுவார்த்தைக்கு குறைந்தது இரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என்று இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் காசாவில் தொடர்ந்து பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 100 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் 40 பேரை விடுவிப்பதற்கு பகரமாக ஆறு வார போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இஸ்ரேல் எதிர்பார்ப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கட்டாரில் இருக்கும் ஹமாஸ் பிரதிநிதிகள் காசாவை தளமாகக் கொண்ட அந்த அமைப்பின் உறுப்பினர்களுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதில் இருக்கும் சவால்கள் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதாக இஸ்ரேலிய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் ஹமாஸ் அமைப்பும் கடந்த வாரம் போர் நிறுத்த பரிந்துரை ஒன்றை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.