யாழில் போலி காவல்துறையினர் போல் நடித்த கும்பல் - ஒருவர் கைது!

லீசிங் நிலுவைப் பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து தம்மை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனத்தின் பணியாளர் ஒருவரை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தேடப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் நிதி நிறுவனம் ஒன்றில் குத்தகைக்கு (லீசிங்கில்) டிப்பர் வாகனம் எடுத்துள்ளார்.

அவரது வாகனம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோப்பாய் வீதி சமிஞ்ஞை விளக்கில் தரித்து நின்ற போது அங்கு வந்த நால்வர் தம்மை காவல்துறையினர் எனக் கூறி லீசிங் தவணைப் பணம் செலுத்தவில்லை என பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வாகனத்தை லீசிங்கில் கொள்வனவு செய்தவரினால் கோப்பாய் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

தனது வாகனத்துக்குள் அலைபேசி ஒன்று, 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பன இருந்ததாக முறைப்பாட்டில் அவர் குறுப்பிட்டிருந்தார்.

விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், கோப்பாயைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் மூவரை தேடிவருவதாக காவல்துறையினர் கூறினர்.

கைது செய்யப்பட்ட நபர் மீது சட்டத்துக்கு புறம்பாக வாகனத்தை பறிமுதல் செய்தமை, வாகனத்துக்குள் இருந்த பணம், அலைபேசியை கொள்ளையிட்டமை மற்றும் காவல்துறையினர் என மோசடியாக தம்மை அறிமுகப்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.