கஜேந்திரகுமார் எம்.பி கைது - நியாயத்தை கேட்ட எதிர்க்கட்சி தலைவர் ; பதிலளித்த சபாநாயகர்!

"நாடாளுமன்ற சிறப்புரிமைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபைக்கு வந்து உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டமை நியாயமற்ற செயலாகும்."

இவ்வாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அரசியல் ரீதியிலான செயல்படுகள் தொடர்பில் எமக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன.

அது வேறு விடயம். ஆனால் அவர் நாடாளுமன்றம் வருவதற்கு முன்னர் கைது செய்தமை நியாயமான செயல் இல்லை.

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.சபாநாயகர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச இந்த விடயம் தொடர்பில் தெளிவான ஆணையொன்றை வழங்கியுள்ளமை கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்." என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை எடுத்த பின்னர் அவரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே பாதுகாப்புத் துறையினரின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.