வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தியும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாண தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே குறித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் பிரபாகரன் றஞ்சசனா, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் வவுனியா மாவட்ட தலைவி சிவானந்தன் ஜெனிதா வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் மன்னார் மாவட்ட தலைவி மனுவல் உதயச்சந்திரா, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் யாழ்ப்பாண மாவட்ட தலைவி சிவபாதம் இளங்கோதை ஆகியோர் இணைந்து இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.

28.07.2023 அன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றுக்கு அருகில் மக்கள் இறுதி யுத்தத்தில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த பகுதிக்கு அண்மையில் ஆரம்பிக்கும் கவனயீப்பு பேரணியானது முல்லைத்தீவு நீதிமன்றுக்கு முன்பாக சென்று மாங்குளம் முல்லைத்தீவு வீதியூடாக மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அங்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த தினத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரும் இணைந்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதோடு அன்றைய போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்கவேண்டும் என்பதுடன் மத தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பங்குகொள்ளுமாறும் அன்றையதினம் வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்குமாறும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடி, போக்குவரத்துக்களை நிறுத்தி ஆதரவளிப்பதுடன் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள போராட்டத்திலும் அனைவரும் பங்கேற்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

தேவேளை, இது தொடர்பான  விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று யாழ். ஊடக அமையத்திலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.