மே 6 முதல் அநுர அரசாங்கத்தின் அழிவு ஆரம்பம் : அதிரடி எச்சரிக்கை

பெரும்பாலான உள்ளுராட்சிமன்றங்களை இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும். இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியும் அங்கிருந்தே ஆரம்பமாகும். மே 6ஆம் திகதியிலிருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவை தவிர இவற்றின் உள்ளடக்கங்கள் தொடர்பில் எவ்வித தகவலையும் அறிய முடியாதுள்ளது. ஒப்பந்தங்களிலுள்ள காரணிகள் தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

இதற்கு முந்தைய அரசாங்கங்கள் இந்தியாவுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட போது ஜே.வி.பி. கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியிருக்கிறது. அது மாத்திரமின்றி அவை தொடர்பில் நாட்டு மக்களும் பாராளுமன்றமும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருக்கின்றனர். ஆனால் இவர்களது அரசாங்கம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்கள் மிகுந்த இரகசியமாகவே பேணப்படுகின்றன.

கடந்த தேர்தல்களில் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து ஏமாற்றமடைந்தனர். ஆனால் இம்முறையும் அவ்வாறு ஏமாற்றமடைவதற்கு மக்கள் தயாராக இல்லை. எனவே பெரும்பாலான உள்ளுராட்சிமன்றங்களை இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும். இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியும் அங்கிருந்தே ஆரம்பமாகும்.

மே 6ஆம் திகதி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தம்மை ஏமாற்றிய அரசாங்கத்துக்கு மக்கள் அன்றைய தினம் தமது வாக்குகளால் பாடம் கற்பிக்க வேண்டும்.  தேர்தலின் பின்னர் எமது கட்சியின் கொள்கை மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்படும். அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்ல முன்னர் கட்சியில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.