குடியேறிகள் கப்பலால் பிரான்ஸ் - இத்தாலிக்கு இடையில் மோதல்..! இராணுவ துறைமுகத்திற்குள் அனுமதி

மத்திய தரைக் கடலில் வைத்து மீட்கப்பட்ட புலம்பெயர் குடியேறிகளை யார் பொறுப்பேற்பது என்பது தொடர்பில் பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் முதல்முறையாக இவ்வாறு மீட்கப்பட்ட 230 புலம்பெயர் குடியேறிகளை ஏற்றிய கப்பல், பிரான்ஸ்சின் டூலோன் இராணுவ துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

பிரான்ஸ்சின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் இயக்கப்படும் ஓஷன் வைக்கிங் கப்பல் மூலம் மீட்கப்பட்ட குறித்த புகலிடக் குடியேறிகளை இத்தாலி துறைமுகத்திற்கு கொண்டுசெல்வதற்கு அனுமதியை பெறுவதற்காக பல வாரங்களாக கடலில் காத்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய விதிகளின் கீழ் இவ்வாறான புலம்பெயர் குடியேறிகளை இத்தாலியே பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரான்ஸ்சின் இந்த நடவடிக்கையானது விதி விலக்கான ஒன்றெனவும் பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.