நியூ கலிடோனியாவில் வெடித்த வன்முறையால் அரசியலமைப்பு மறுசீரமைப்பை இடைநிறுத்தியது பிரான்ஸ்


நியூ கலிடோனியாவில் வாக்காளர்கள் தொடர்பான அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஊடக சந்திப்பில் இந்த அறிப்பை வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்குப் பதிலாக உள்ளூர் உரையாடல் மற்றும் ஒழுங்கை மீட்டெடுப்பதற்கு முழுமையாக குரல்கொடுப்பதனை நோக்கமாக கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு தசாப்தங்களில் நியூ கலிடோனியா கண்டிராத மிக மோசமான வன்முறையில், கடந்த செவ்வாயன்று ஒன்பதாவது மரணம் உறுதிசெய்யப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பசுபிக் தீவுகளில் 10 வருடங்களுக்கு மேலாக வசிக்கும் பிரெஞ்சு குடியிருப்பாளர்களை தேர்தல்களின் போது வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

இதன்படி, 24,000 பேரை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த மறுசீரமைப்பிற்கு ஆதரவாக பிரான்ஸ் பாராளுமன்றத்திலும் வாக்களிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நியூ கலிடோனியாவில் அமைதியின்மை ஏற்பட்டது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

அத்துடன், கடந்த 10 ஆம் திகதி வரை சுமார் 1,192 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூ கலிடோனியாவில் உள்ள பிரெஞ்சு உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பிரான்ஸின் தேசிய சட்டமன்றம் மற்றும் செனட் ஆகிய இரண்டாலும் இந்த திருத்தம் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், சீர்திருத்தம் சட்டமாக மாறுவதற்கு இரு அவைகளின் அரசியலமைப்பு மாநாடு தேவைப்பட்டது.

இதனிடையே, திடீரென தேசிய சட்டமன்றத்தை கலைத்த இம்மானுவேல் மக்ரோன் தேர்தல் திகதிகளை அறிவித்த நிலையில், அங்கு அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.