கனேடிய அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி!

கனேடிய அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக, யோர்க் பிராந்திய பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை 19:20 மணிக்கு டொராண்டோவிற்கு வடக்கே சுமார் 30 கிமீ (19 மைல்) தொலைவில் உள்ள வாகனில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

73 வயதான பிரான்செஸ்கோ வில்லி என அடையாளம் காணப்பட்ட துப்பாக்கிதாரி அரை தானியங்கி கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக அதிகாரி மேலும் கூறினார்.அந்தக் கட்டிடத்தில் நீண்டகாலமாக வசிப்பவராகக் கூறப்படும் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இருப்பினும் அவரது நோக்கத்தை பொலிசார் வெளியிடவில்லை. மூன்று தனித்தனி அடுக்குமாடி குடியிருப்புகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களை பொலிஸார் இன்னும் முறையாக அடையாளம் காணவில்லை.

உயிரிழந்த ஐந்து பேரில் மூன்று பேர் அடுக்குமாடி கட்டடத்தின் இயக்குநர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி ஏந்திய நபருக்கும் கட்டடத்தின் நிர்வாகக் குழுவிற்கும் இடையே உள்ள தொடர்பு உள்ளிட்ட நோக்கம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிதாரியின் சமீபத்திய சமூக ஊடக கணக்குகளில், அடுக்குமாடி குடியிருப்பின் மின் அலகு குறைப்பாடுகளை நிர்வாகத்திடம் வெளிப்படுத்தியிருந்தார்.