யாழில் மூன்றாவது நாளாக தொடரும் கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்...! கண்டுகொள்ளாத தமிழ் எம்.பிகள்...!


யாழில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள கடற்றொழிலாளர்களில் ஒருவரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாகவும் இதுவரை தமது போராட்டத்திற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களோ அமைச்சர்களோ ஆதரவு தரவில்லை என  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.


இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடந்த 19 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ் மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து முன்னெடுத்து வரும் இப் போராட்டத்தில், யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் செல்லத்துரை நற்குணம், அன்ரன் செபராசா, சின்னத்தம்பி சண்முகராஜா மற்றும்  அந்தோணிப்பிள்ளை மரியதாஸ் ஆகிய நான்கு கடற்றொழிலாளர்கள் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கடற்றொழிலாளர் ஒருவரது உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, குறித்த கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்றையதினம்(21)  யாழ் தையிட்டி அன்னை வேளாங்கணி கடற்றொழில் சங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

இதேநேரம் நடைமுறைச் சாத்தியமற்றதென தெரிந்தும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் போராட்டங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது வகிபாகத்தை அழைப்பு விடுக்காமலும் தானாக ஒட்டிக்கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைகளும் செய்திகளும் விடுப்பவர்கள் எமது இந்த வாழ்வாதார பிரச்சினைக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்பது வேதனையாக உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடற்றொழிலாளர்கள் கவலை  தெரிவிக்கின்றனர்.