இரண்டு ஆண்டில் போருக்கான தீர்வு! யாழ்ப்பாணத்தில் ரணில் அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் இரண்டு ஆண்டுகளில் தீர்வு காணப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்த பிரச்சனைகள் மேலும் சில ஆண்டுகளுக்கு தொடர முடியாது என சர்வமத தலைவர்களுடன் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,  

இலங்கையில் யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நாம் அனைவரும் பேசுகிறோம். இவற்றை நாம் தற்போது நிவர்த்தி செய்து வருகிறோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனைக்கும் வீடுகளை பெற்றுக் கொடுக்கும் நடைவடிக்கையையும் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கு முன்னர் தீர்க்க வேண்டுமென நான் கூறினேன்.

இவ்வாறாக பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். தினமும் இந்த பிரச்சனைகள் தொடர்பில் பேசிக் கொண்டு இருக்க முடியாது.

இலங்கையின் ஏனைய மாகணங்களை போல், வடக்கு மாகாணத்துக்கும் அபிவிருத்தியடைய நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதற்கு சமய தலைவர்களின் ஆதரவு கட்டாயம் தேவை.

இலங்கையில் இனவாத்தையோ மத வாதத்தையோ தூண்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை. வடக்கில் மத ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்ள உதவுமாறு இங்குள்ள அனைவரிடமும் நான் கோர விரும்புகிறேன்.

ஒரு அரசாங்கமாக எமக்கும் ஒரு பொறுப்புள்ளது. வடக்கிலுள்ள இராணுவத்தினரின் கீழ் உள்ள கோவில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் தொடர்பில் நாம் தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு காண வேண்டும்.

இதனை தொடர்ந்து, வடக்கில் உள்ள இந்து மதத் தலைவர்கள் மற்றும் நல்லூர் ஆலய பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடி நாம் வடக்கில் கோவில் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுப்போம்.

இந்த விடயத்தில் நான் தலையிட மாட்டேன். இது தொடர்பில் வடக்கிலுள்ள அரசியல்வாதிகள் தீர்மானிக்க முடியாது. என்றார்.