இராணுவத்தினரை எழுப்ப உண்ணா விரதம்..! மாவீரர்களின் பெற்றோர் எடுத்த முடிவு


இராணுவம் ஆக்கிரமித்துள்ள அளம்பில் மாவீரர் இல்லத்தை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுப்போம் என மாவீரர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தை ஆக்கிரமித்து 23 ஆவது சிங்க படையணி முகாம் அமைந்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாவீரர்களின் பெற்றோரே இவ்வாறு கூறியுள்ளனர்.

"எங்கள் பிள்ளைகள் புதைக்கப்பட்ட இடத்தில் இராணுவத்தினர் விவசாயம் செய்கிறார்கள், கிரிக்கெட் விளையாடுகிறார்கள், உணவகம் நடத்துகிறார்கள்.

எங்கள் பிள்ளைகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்துவதற்கு அவர்கள் உடனடியாக கல்லறையை விட்டு வெளியேற வேண்டும்."என்று முத்தையன்கட்டை சேர்ந்த முருகையா இராசையா என்ற மாவீரரின் தந்தை தெரிவித்தார்.

அதேவேளை, "எங்கள் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களின் ஆத்மா சாந்தியடையவும், தீபம் ஏற்றவும் முடியாமல் கடும் மன உளைச்சலில் வாழ்கிறோம்" என மட்டக்களப்பை சேர்ந்தவரான மாவீரர்களின் தாய் தயாளினி தெரிவித்தார்.

மேலும், அளம்பில் மாவீரர் மயானம் அமைந்துள்ள காணியை மீளப் பெற்றுத் தரவேண்டும். விதைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு பெற்றோர்களும் உறவுகளும் அஞ்சலி செலுத்தும் வகையிலும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நிறைவேற்றத் தவறினால் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடி வீரச் சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் நவம்பர் 27ஆம் திகதி நினைவுகூரப்ப டுவது வழக்கம். விடுதலைப் புலிகளின் காலத்தில் மிகச்சிறப்பாக இந்தத் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

எனினும், இறு திப் போர் முடிவுக்கு வந்த பின்னர், மாவீரர்களை நினைவேந்த தடை விதிக்கப்பட்டது. எனினும், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் முதல் இந்தத் தடை நீக்கப்பட்டாலும் இராணுவத்தின் அடக்கு முறைகள் தொடர்கின்றன.

போர் காலத்திலும், போரின் முடிவுற்றதைத் தொடர்ந்தும் வடக்கு - கிழக்கு முழுவதும் 25 மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது