ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2587 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.
இம்முறை சிங்கள மொழி மூலம் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 637 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் 76 ஆயிரத்து 313 மாணவர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் பரீட்சை நிலையங்களுக்கான முழுமையான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்
ஏதேனும் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து தேவையான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
அதேபோன்று அவசர மருத்துவ நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சாத்திகள் காலை 8.30 மணிக்கு பரீட்சை மண்டபங்களுக்கு சென்று விட வேண்டும்.
முதலில் இரண்டாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். காலை 9.30க்கு பரீட்சை ஆரம்பமாகி 10.45க்கு நிறைவடையும். அதன் பின்னர் முற்பகல் 11.15க்கு முதலாம் பகுதி வினாத்தாள் வழங்கப்படும். 12.15க்கு பகுதி ஒன்று பரீட்சை நிறைவடையும்.
பரீட்சைக்கு தேவையான உபகரணங்கள் மாத்திரமமே மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படும். கைக்கடிகாரத்தை உபயோகிக்க முடியும். ஆனால் நவீன கைக்கடிகாரங்களை உபயோகிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்றார்.