தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி! ஐரோப்பாவில் வெடிக்கும் சர்ச்சை!!


எதிர்வருகின்ற மே மாதம் 18ம் திகதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஏற்பாடுகளை, டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரன் அவர்களின் சகோதரரது குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவும், தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் டென்மார்க் நோக்கிப் பயணமாக இருப்பதாகவும் தெரியவருகின்றது.

தலைவர் பிரபாகரன் அவர்களின் அண்ணன் குடும்பத்தினர் முன்னெடுத்துள்ள இந்த அஞ்சலி நிகழ்வு பல தரப்புக்களால் வரவேற்கப்பட்டு வருகின்ற அதேவேளை, தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வியத்துக்கு சில தரப்புக்களால் எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது தலைவர் பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

அதனைத் தோடர்ந்து விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் கே.பி. என்று அழைக்கப்பட்ட குமரன் பத்மநாபா மற்றும் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் போன்றோர் தலைவர் பிரபாகரன் அவர்களின் இறப்பை உறுதிப்படுத்தியிருந்தார்கள்.

அதேவேளை, தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதான நம்பிக்கை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்த விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்புக்களால் தொடர்ந்து வெளியிடப்பட்டும் வந்தன.

தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகப் பேசியவர்கள், நம்பியவர்கள் அத்தனைபேரும் துரோகிகளாக்கப்பட்டுவந்தார்கள். முள்ளிவாய்க்கால் அசம்பாவிதத்தைத் தொடர்ந்து கடந்த 15 வருடங்களாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடுசெய்யப்பட்டு நடைபெற்றுவந்த எந்த மாவீரர் தின நிகழ்வுகளிலும், பொது நிகழ்வுகளிலும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்படவில்லை.

அண்மையில் கூட, தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாக கவிஞர் காசி ஆணந்தன், பழ நெடுமாறன் போன்றோர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டும் இருந்தார்கள்.

இப்படியான நிலையில், தலைவர் பிரபாகரன் அவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வை அவரது குடும்ப உறுப்பினர்கள் மேற்கொண்டு வருவது சில சர்ச்சைகளையும் உருவாக்கி வருகின்றது.

தலைவர் மரணிக்கவில்லை அவர் உயிருடன் இருக்கின்றார் என்று ஒரு தரப்பும், தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை அவரது குடும்பத்தினருக்கு இல்லை என்று வேறொரு தரப்பும், தலைவர் மரணித்தது மே 18 அல்ல மே 17 என்று வேறு சில தரப்புக்களும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

சமூக ஊடகங்களில் இந்த விடயம் பெரும் பேசுபொருளாகிவருகின்ற அதேவேளை, அஞ்சலி நிகழ்வு நடைபெறுகின்ற டென்மார்க்கிற்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து மக்கள் செல்வதற்கான பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருதான அறிவிப்புக்களும் வெளியாகி வருகின்றன.

புலம்பெயர் நாடுகளிலுள்ள முன்னாள் போராளிகள் அஞ்சலி நிகழ்வுக்குப் பெரும் அதரவு வழங்கிவருகின்ற அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் செயற்படுகின்ற தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தொடர்ந்தும் மௌனம் காண்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.