விளாடிமிர் புடினிடம் இருந்து உக்ரைன் வான்வெளியை காப்பாற்றும் வகையில், 120 போர் விமானங்களுடன் ஐரோப்பாவும் பிரித்தானியாவும் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அசாதாரண பாதுகாப்பு திட்டத்திற்கு Operation Sky Shield என பெயரிட்டுள்ளனர். ஐரோப்பிய விமானப்படை மற்றும் பிரித்தானியாவின் RAF இணைந்து IAPZ என்ற Integrated Air Protection Zone ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த சிறந்த விமானிகள் தலைமை தாங்குவார்கள். இந்த நடவடிக்கைகளுக்கும் நேட்டோவுக்கும் தொடர்பில்லை என்றே விளக்கமளித்துள்ளனர்.
மேலும் உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதே இதன் நோக்கமாக இருக்கும், இதில் cruise ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முறியடிப்பதே முதன்மையான இலக்கு என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு மண்டலம் என்பது செயல்பாட்டில் உள்ள உக்ரைனின் மூன்று அணு மின் நிலையங்கள் மற்றும் ஒடேசா மற்றும் லிவிவ் நகரங்கள் உட்பட நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பை பாதுகாக்கும்.
ஆனால், ரஷ்யாவுடன் நேரடி மேற்கத்திய நாடுகளின் மோதலுக்கான அச்சம் காரணமாக உக்ரைனின் கிழக்குப் பகுதியை ஐரோப்பா மற்றும் பிரித்தானியாவின் இந்த புதிய திட்டம் உள்ளடக்கவில்லை.
இதனிடையே, பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் இராணுவ நிபுணர்கள் பலர், இந்தத் திட்டமானது உக்ரைனில் 10,000 ஐரோப்பிய தரைப்படை வீரர்கள் களமிறங்குவதை விட அதிக இராணுவ, அரசியல் மற்றும் சமூக பொருளாதார தாக்கத்தை அடையக்கூடும் என பரிந்துரைத்துள்ளனர்.
உண்மையில் இந்த திட்டமானது 2022ல் உக்ரைன் போர் தொடங்கிய சில மாதங்களில் உக்ரைனுடன் இணைந்து முன்னாள் RAF விமானிகள் மற்றும் இராணுவ நிபுணர்கள் குழு ஒன்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அனுமதியை அளிக்க எந்த அரசாங்கமும் முன்வரவில்லை.