இலங்கையில் எரிக் சொல்ஹெய்மின் திடீர் சந்திப்புகள் - அனைத்துக்கட்சி சந்திப்பின் பின் தீவிர அரசியல் ஊகங்கள்


இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகரிக்க முயற்சி செய்வதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுடனான சந்திப்பின் பின்னர் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது எரிக் சொல்ஹெய்ம் இதனைத் தெரிவித்தார்.

மேலும் பதில் வழங்கிய அவர், “இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று நான் இங்கு வந்தேன்.

அண்மையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் குறித்து மனோ கணேசன் எனக்கு தெளிவு படுத்தினார்.

இலங்கையில் உள்ள தமிழர்கள், சிங்களவர்கள் என அனைவரும் சமாதானமாக வாழ வேண்டும். மலையக மக்களுக்கு மேலும் வழங்கப்பட வேண்டிய நிவாரணிகள் குறித்து கலந்துரையாடினோம்.

இலங்கையின் பொருளாதார நிலை காரணமாக சில தரப்பினர் உணவின்றி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வழமைக்கு மாறாக உணவு பழக்கவழக்கங்கள் மாற்றமடைந்துள்ளன.

இந்த நிலையை கருத்தில் கொண்டு அதிபர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறார். இருதரப்பு கடன் வழங்குநர்களான சீனா மற்றும் இந்தியாவுடன் கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இலங்கையின் இவ்வாறான சூழ்நிலையில் அதிபருக்கு என்னால் வழங்க முடிந்த ஆதரவை நான் வழங்குவேன். முதலீட்டாளர்களை அதிகரிக்க முயற்சி செய்வேன்” - என்றார்.

இதேவேளை, அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழலை உருவாக்க ஒத்துழைக்குமாறு எரிக் சொல்ஹெய்மிடம் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.