தினேஷின் காரிலிருந்து வெற்றுப் பொதி மீட்பு! கொடுக்கல் வாங்கல்களுக்கு வழிகாட்டியுள்ள நபர் - வெளியாகும் தகவல்


ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் வாகனத்திலிருந்து வெற்றுப் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினேஷ் சாப்டர் தனது வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் பொரளை பொது மயானத்திற்கு சென்றுள்ளதுடன் இடை நடுவில் ஒரேயொரு இடத்தில் மாத்திரம் தான் பயணித்த வாகனத்தை நிறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்படி அவர் தனது வீட்டுக்கும் பொரளை பொது மயானத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் சிற்றுண்டி உண்பதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளமை குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறான சூழலிலேயே விசாரணை அதிகாரிகள் காரிலிருந்து வெற்றுப் பொதியை கண்டுபிடித்துள்ளதுடன், குறித்த சிற்றுண்டிகள் வேறு நபருக்காக கொண்டு வரப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினேஷ் சாப்டரின் வீடு மற்றும் அலுவலகத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த கொலையில் சந்தேகநபர்களாக கருதப்படாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தினேஷின் கீழ் பணிபுரியும் சாரதிகளிடம் இருந்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவ்வப்போது பல முக்கிய தகவல்களை வெளிப்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தினேஷ் சாப்டருக்கு பல்வேறு கொடுக்கல் வாங்கல்களுக்கு வழிகாட்டிய நபர் ஒருவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நபர் தினேஷிற்கு மிகவும் விசுவாசமாக இருந்துள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் மேலதிக தகவல்களை சேகரித்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தினேஷ் சாப்டர் இதற்கு முன்னர் சாரதியின்றி பயணம் செய்துள்ளாரா அல்லது சாரதியின்றி நண்பர்களுடன் பயணிக்கப் பழகினாரா என்பதை கண்டறிய புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.