தென்னாபிரிக்காவில் மின்தூக்கி விபத்து : 11 பேர் பலி, 75பேர் காயம்

தென்னாபிரிக்காவிலுள்ள பிளாட்டினம் சுரங்கத்தில் மின்தூக்கியின் கம்பிக் கயிறு அறுந்து 200 மீற்றர் உயரத்திலிருந்து விழுந்ததால் 11 தொழிலாளா்கள் உயிரிழந்ததுடன் 75 போ் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்டின் ரஸ்டன்பேர்க் நகரத்திலுள்ள தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்தச் சுரங்கத்தில் இந்த விபத்து  திங்கட்கிழமை (27) இரவு இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மின்தூக்கியில் இருந்த 86 பேருமே உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் என்பதுடன், பணிநேரம் முடிவடைந்து தொழிலாளா் குழுவினா் மாறும்போதே இந்த விபத்து ஏற்பட்டதென அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை சுரங்கத்தில் மின்தூக்கி அறுந்து விழுந்து ஏற்பட்டுள்ள இந்த விபத்து மிகவும் அபூா்வமானது என்றும் தெரிவிக்கப்படுவதுடன்  விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிளாட்டினம் உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கும் தென்னாபிரிக்காவின் பல்வேறு சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதனால் அதிக உயிா்ச் சேதம் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் தென்னாபிரிக்க சுரங்க விபத்துக்களில் 49 போ் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் முந்தைய ஆண்டில் இவ்வாறான சுரங்க விபத்துகளில் உயிரிழந்த 74 பேருடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சற்று குறைவாகும் என்பது  குறிப்பிடத்தக்கது.