பாகிஸ்தானுக்கு யானைகளை அனுப்புவதாக வெளியான தகவலுக்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி மிருகக்காட்சி சாலையில் இருந்த 17 வயதான நூர்ஜகான் என்ற யானை கடந்த வாரம் உயிரிழந்தது.
அந்த யானையின் நிலை அறிந்து சர்வதேச கால்நடை மருத்துவர்கள் அதை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
அதையடுத்து, கராச்சி, லாகூர் மிருகக்காட்சி சாலைகளுக்கு 2 யானைகளை இலங்கை வழங்கப்போவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதை இலங்கை அரசு மறுத்துள்ளது.
இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை தூதரகம் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'பாகிஸ்தான் மிருகக்காட்சி சாலைகளுக்கு யானைகளை வழங்குவது தொடர்பாக இலங்கை அரசு விவாதிக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ இல்லை' என்று தெரிவித்துள்ளது.