ஈகுவடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை

 ஈகுவடார் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லாவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் குயிட்டோவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது அவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவின் வடமேற்கு திசையில் ஈகுவடார் என்ற நாடு உள்ளது. அங்கு வரும் 20 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 8 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். இன்னும் சில நாட்களில் அதிபர் தேர்த்ல் நடைபெற இருக்கும் நிலையில், அங்கு இறுதிக்கட்ட பிரசாரங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஈகுவடார் தலைநகரில், build Ecuador moment என்ற கட்சி சார்பில் பெர்னாண்டோ விலாவிசென்சியோ அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

அவர் தனது பிரசாரத்தை முடித்து விட்டு பிரசார வாகனத்தில் ஏற முயற்சி செய்த போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இறப்பிற்கு ஈகுவடாரின் தற்போதைய அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ, “ அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோவின் படுகொலையால் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது நினைவிற்காகவும், அவரது போராட்டத்திற்காகவும், குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

 சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது” என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெர்னாண்டோ விலாவிசென்சியோவை சுட்டுக்கொலை செய்தது யார்? இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து அந்நாட்டு விசாரணை அமைப்பால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.