ரஷ்யாவை அதிரவைத்த நிலநடுக்கம் : ஜப்பானையும் தாக்கியது சுனாமி


ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரஷ்யா மற்றும் ஜப்பானின் சிலப்பகுதிகளில்  சுனாமி  ஏற்பட்டுள்ளது.



ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரையில் இன்று 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் 4 மீட்டர் வரை அலைகள் எழுந்து  சுனாமி ஏற்பட்டது.


இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.


ரஷ்யாவிலிருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது கட்டிடங்களுக்குள் நிலநடுக்கம் ஏற்படும் போதான காட்சியைக் காட்டுகிறது.


மேலும் ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த இந்த நில அதிர்வின் காரணமாக, ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியை சுனாமி பேரலை தாக்கியுள்ளது.


அந்நாட்டு நேரப்படி, மு.ப 10.30 க்கு ஆழிப்பேரலை தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சுமார் 04 மீற்றர் உயரத்துக்கு அலைகள் மேலெழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஜப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஜப்பானின் டோகைடோ (Tokaido), ஜோபன் (Joban) உள்ளிட்ட புகையிரத மார்க்கத்தில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை, சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபுகுஷிமா டாய்ச்சி மற்றும் ஃபுகுஷிமா அணுமின் நிலையங்களில் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பான, உயரமான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி தெரிவித்துள்ளது.


மேலும் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு கம்சட்கா தீபகற்பத்தில் 13 அடி உயர சுனாமி அலைகள் தாக்கியதாக சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


முன்னதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை சுனாமி எச்சரிக்கைகள் தொடர்ச்சியான ஆலோசனைகள் மற்றும் கண்காணிப்புகளை வெளியிட்டுள்ளது, இதில் அலாஸ்காவின் அலூடியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் அடங்கும்.

மேலும் ஹவாய், குவாம் மற்றும் வடக்கு மரியானா தீவுகளுக்கும் சுனாமி கண்காணிப்பு வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.