இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று 5.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பப்புவா மாகாணத்தின் ஜெயபுர நகரில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணியளவில் 22 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க பூகோளவியல் அளவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு கட்டிடம் இடிந்து கடலில் விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            