சீனாவின் திபெத் பகுதியில் உள்ள மலைத்தொடரில் இன்று காலை ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
திபெத்தில் உள்ள புனித நகரமான ஷிகாட்சேயில் உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணியளவில் 7.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அயல் நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வின் தரவுகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்திற்குப் பிறகு கட்டடங்கள் இடிந்து விழும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகப் பதிவுகளில் வெளியாகியுள்ளன.
சீனா பூகம்ப வலையமைப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜியாங் ஹைகுன் சீனா சீன ஊடகமான சிசிடிவியிடம், "ஒரு பெரிய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்படும் சிறிய அதிர்வுகளின் வலிமை மற்றும் நடுக்கம் படிப்படியாக குறையும்" என்று கூறியுள்ளார்.
5 ரிச்டர் என்ற அளவிலான மற்றொரு நிலநடுக்கம் இன்னும் நிகழக்கூடும் என்றாலும், "பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது" என்றும் ஜியாங் குறிப்பிட்டுள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இப்பகுதி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. உறைபனிக்குக் கீழே வெப்பநிலை உள்ள இப்பகுதியில், சீன விமானப்படை மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
அப்பகுதியில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இரண்டும் துண்டிக்கப்பட்டுள்ளன.