மியன்மாரை தொடர்ந்து அத்திலாந்திக், ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம்



மியன்மாரில் நேற்று பதிவாகிய பாரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் மற்றும் அத்திலாந்திக் பெருங்கடலிலும் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

ஆப்கானிஸ்தானில் 4.2 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
 
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜூர்மிலிருந்து தென்கிழக்கே 24 கிலோ மீற்றர் தொலைவில் 226.9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 இதேநேரம் அத்திலாந்திக் பெருங்கடலில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
 
பிரேசிலிலிருந்து 585 கிலோமீட்டர் தொலைவில் அத்திலாந்திக் பெருங்கடலில் 6.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை மியன்மார் நில அதிர்வை அடுத்து காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகளுக்காக சீனா, அந்நாட்டு மீட்பு குழுவொன்றை அனுப்பியுள்ளது.
 
இந்த மீட்பு குழுவில் வைத்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதன்படி, 37 பேர் கொண்ட சீன மீட்பு குழு இன்று (29) மியன்மாரை சென்றடையவுள்ளது.
 
மியன்மாருக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேபோன்று நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு இந்தியா அவசர உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.

அயல் நாடான தாய்லாந்து வரை பாதிப்பை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் எதிரொலியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த கவலையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக தனது பிரார்த்தனை வெளிபடுத்திய பிரதமர் மோடி மேலும், விரிவான உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.