காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து சரமாரித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலின் பிரதான நகரான டெல் அவிவில் நேற்றுக் காலை இடம்பெற்ற அளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கும் யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், ‘ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனின் டெல் அவிவ் இலக்கு வைக்கப்பட்டது’ என்று சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளனர்.
‘இடைமறிக்கும் அமைப்பைக் கடந்து ராடார்களால் அவதானிக்க முடியாத’ புதிய ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியே தாக்குதல் நடத்தியதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
டெல் அவிவ் நகரின் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக குறிப்பிட்ட இஸ்ரேலிய இராணுவம், வான் இலக்குகளை இடைமறிக்கும் வான் பாதுகாப்பு அமைப்பு இயங்காதது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
‘தொலைதூரத்திற்கு பறக்கக் கூடிய மிகப்பெரிய ஆளில்லா விமானம் ஒன்றைப் பற்றியே நாம் பேசுகிறோம்’ என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தாக்குதலை அடுத்து செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இந்த வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்கு அருகில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் இருந்து 50 வயதான ஆடவர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர். தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்தே டெல் அவிவ் மீதான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே தினசரி மோதல் இடம்பெற்று வருவதோடு அது முழு அளவில் போர் ஒன்றாக உருவெடுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவே செயற்பட்டு வருவதாக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா மற்றும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதோடு அண்மைய நாட்களாக அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ஐ.நா. பாடசாலைகள் இலக்கு வைக்கப்பட்டு வருகின்றன