பம்பலப்பிட்டியில் உள்ள வங்கியொன்றுக்குச் சொந்தமான வேனிலிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் மதிப்புள்ள பணப் பை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பெறப்பட்டு 24 மணி நேரத்துக்குள் வங்கியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன பணப் பையிலிருந்து ஒரு கோடியே ரூ39 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பணப் பையில் ஒரு கோடி ரூபா பெறுமதியான செல்லுபடியாகும் நாணயத்தாள்கள், 6,000 ரூபா பெறுமதியான சேதமடைந்த நாணயத்தாள்கள் மற்றும் ரூ.1,300 மதிப்புள்ள அமெரிக்க டொலர்கள் ஆகியவை இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பம்பலப்பிட்டி, பொன்சேகா பிளேஸில் அமைந்துள்ள ஒரு வங்கியின் கொழும்பு பகுதியில் உள்ள 15 ஏ.டி.எம் மையங்களில் குவிந்திருந்த பணத்தைச் சாரதி உட்பட நான்கு பேர் கடந்த 13 ஆம் திகதி சேகரித்து பம்பலப்பிட்டி கிளைக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பணத்தைப் பெறச் சென்ற அதிகாரிகள் 15 பைகள் பணத்தைக் கொண்டு வந்த போதிலும், அவர்கள் 14 பைகள் பணத்தை மாத்திரமே வங்கிக்கு ஒப்படைத்ததாகவும், வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தைக் கொண்ட பையை ஒப்படைக்கவில்லை என்றும் வங்கியின் சிரேஷ்ட நிறைவேற்று முகாமையாளர் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, பம்பலப்பிட்டி பொலிஸ்நிலையத்தின் பொறுப்பதிகாரி, தலைமை பரிசோதகர் சம்பத் பத்மலால், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, உதவி பரிசோதகர் கசுன் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர், பணத்தைப் பெறச் சென்ற குழுவின் மூன்று அதிகாரிகள் மற்றும் சாரதியிடம் வாக்குமூலங்களைப் பெற்றனர்.
மேலும் பல கோணங்களில் விசாரணைகளை நடத்திய பின்னர், சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, விசாரணையை நடத்திய பொலிஸார், சந்தேக நபரின் அறிவுறுத்தலின் பேரில் பயகலவில் உள்ள சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று, அறையின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.13.96 மில்லியன் கொண்ட பணப் பையைக் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு வேலைக்கு வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
34 வயதான சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.