அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தையில் அதிரடி திருப்பம்: போர் நிறுத்தத்தை ஏற்றது உக்ரேன்



ரஷ்யாவுடனான போரில் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.


இதனையடுத்து அமெரிக்கா இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை பகிர்வு மீதான அதன் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உரிய பதிலளிப்பார் என நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க - உக்ரேன் முடிவை ரஷ்ய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், 2022 இல் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரில் முதல் போர்நிறுத்தம் ஏற்படும் என்றே தெரிவிக்கப்படுகிறது.


இதனிடையே, போர் நிறுத்தம் தொடர்பில் உக்ரேன் அறிவித்த சில மணி நேரங்களில், உக்ரேன் தலைநகர் மீது ரஷ்யா உக்கிர தாக்குதலை முன்னெடுத்துள்ளது.



சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் முன்னெடுக்கப்பட்ட மூத்த அமெரிக்க மற்றும் உக்ரேன் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஒரு கூட்டு அறிக்கையில் போர் நிறுத்த ஒப்பந்தமானது அறிவிக்கப்பட்டுள்ளது.


மட்டுமின்றி, ஜனாதிபதி ட்ரம்புக்கும் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸிக்கும் இடையிலான ஓவல் அலுவலக கருத்து மோதலுக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.


இந்த ஒப்பந்தம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போதைய வடிவத்தில் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள புடின் தயாரா என்பது இதுவரை உறுதியாகவில்லை.


ட்ரம்ப் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் முன்னோக்கி செல்ல இருப்பதாகவும், உடனடியாக ரஷ்ய தரப்பை இந்த விவகாரம் தொடர்பில் சந்திக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


ரஷ்யாவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்கும் என்றால், அது மிக முக்கியமான திருப்பமாக இருக்கும் என்றும், அப்படியான சூழல் ஏற்படவில்லை என்றால், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.



இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதை பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வரவேற்றுள்ளார். உக்ரேனில் அமைதிக்கான முக்கியமான தருணம் இது, விரைவில் நீடித்த மற்றும் பாதுகாப்பான அமைதியை அடைவதற்கான நமது முயற்சிகளை நாம் அனைவரும் இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளதுடன், உக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.