ட்ரம்பின் அறிவிப்பால் ஆட்டங்கண்டுள்ள இலங்கை : தொழிற்சாலைகள் பல மூடும் அபாயம்


இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

 
அமெரிக்காவால் ஆசிய நாடுகளில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
 
2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
 
மேலும், வியட்நாமுக்கு 46 வீதமும், சீனாவுக்கு 34வீதமும், இந்தியாவுக்கு 26வீதமும், பிலிப்பைன்ஸ{க்கு 17வீதமும் மற்றும் சிங்கப்பூருக்கு 10வீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.


டொனால்ட் ட்ரம்பின் இந்த முடிவால் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரயல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு சில தொழிற்சாலைகளை மூடுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.  

இந்நிலையில் மாற்றுச் சந்தையை தேடுவதன் மூலம் அமெரிக்காவின் வரி நெருக்கடியை சமாளித்துக் கொள்ள வாய்ப்பாக அமையும் என அவர' சுட்டிக்காட்டியுள்ளார்.

எனீனும், இலங்கையில் இருந்து அதிகளவான ஆடைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் மீது விதித்துள்ள வரி தொடர்பில் ஆராய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உயர்மட்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இதேவேளை இலங்கை மீதான டொனால்ட்; ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பில், அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.
 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரி அறிவிப்பு, அமெரிக்காவுடன் நீண்டகால உறவுகளை கொண்ட இலங்கை போன்ற நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச வர்த்தகத்திற்கு புதிய அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, ஆசிய பங்குச் சந்தைகள் சரிவை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 2.68 வீத சரிவையும், ஹொங்ஹொங்கின் ஹேங் செங் குறியீடு 1.16 வீத சரிவையும், சீனாவின் சிஎஸ்ஐ 300 குறியீடு 0.48 வீத சரிவையும் சந்தித்துள்ளது.

மேலும், தென் கொரியாவில், கோஸ்பி குறியீடு 1.29 வீத சரிவையும், அவுஸ்திரேலியாவின் S&P/ASX 200 குறியீடு 1.17வீத சரிவையும் சந்தித்துள்ளது.