தனது குடிமக்களை சீனா, ஹொங்கொங்கிற்கு செல்ல வேண்டாம் என தாய்வான் எச்சரித்துள்ளது.
சீனாவில் இருந்து பிரிந்த தாய்வான் 1949யில் தனி நாடானது. ஆனாலும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா முயற்சித்து வருகிறது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும், தாய்வானுடன் எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் தாய்வான் தனது நாட்டின் குடிமக்களை சீனாவிற்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது. அதேபோல் ஹொங்கொங், மக்காவோவின் அரை தன்னாட்சி சீனப் பகுதிகளுக்கும் செல்வதைத் தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது.
தாய்வான் நாட்டைச் சேர்ந்த நூறாயிரக்கணக்கானவர்கள் சீனாவில் வாழ்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வணிகம், சுற்றுலா அல்லது குடும்ப வருகைக்காக பயணம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் தாய்வானின் வான் பரப்புக்குள் பத்து சீன விமானங்கள் இவ்வார முற்பகுதியில் பிரவேசித்ததாக தாய்வானின் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் என்று தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று 17 சீன இராணுவ விமானங்களும் 08 சீனக் கடற்படைக் கப்பல்களும் தாய்வானைச் சுற்றி செயற்பட்டன. அவற்றில் 10 இராணுவ விமானங்கள் எமது வான் பரப்புக்குள் பிரவேசித்ததாகவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.