ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் - புலம்பெயர் இலங்கையர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை


அடக்குமுறை மற்றும் கொடூரமான செயற்பாட்டை மேற்கொள்ளும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் என்றும் இந்த நாட்டின் குடிமக்களையும் புலம்பெயர் இலங்கையர்களையும் தான் கேட்டுக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இன்றையதினம் நாடாளுமன்றில் நடைபெற்ற நீதித்துறை சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே இவ்வாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோரை கைது செய்து தடுத்து வைத்துள்ளமையானது, இலங்கை பிரஜைகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவையும் காவல்துறையையும் தரைமட்டமாக்குவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அடக்குமுறை மற்றும் கொடூரமான சட்டங்களைப் பயன்படுத்தி மனித உரிமைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும், இந்த பிரச்சினைகள் முடியும் வரை இலங்கைக்கு ஒரு டொலர் கூட அனுப்ப வேண்டாம் என்றும் இந்த நாட்டின் குடிமக்களையும் புலம்பெயர் இலங்கையர்களையும் நான் கடுமையாக கேட்டுக்கொள்கிறேன்.

கட்சியை விட்டு வெளியேறி அரசாங்கத்தில் இணையும் நபர்கள் இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அத்தகைய கோழைத்தனத்தில் தான் ஈடுபடபோவதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.