இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல்,
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை.
இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்றார்.
அதற்கமைய இந்தச் சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கடந்த 75 வருடகால அனுபவத்தில் தமிழ் மக்களால் ஒற்றையாட்சியின் கீழ் வாழ முடியாது என்பதைத் தாம் புரிந்துகொண்டிருப்பதாகவும், அதேபோன்று அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்நோக்கிச் செல்ல முடியாது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் எம்.பி., அஜித் டோவலிடம் எடுத்துரைத்தார்.
இதேநேரம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (30) காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.
இதேநேரம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்றையதினம்(29) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்தியா மற்றும் இலங்கை இடையே பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், இருதரப்பு உறவுகளில் பூரணத்துவம் என்ற அம்சத்தை கருத்தில் கொண்டு இது பரஸ்பர நலனுக்கானது என்றும் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இந்தியா விரும்புவதாகவும், முன்னுரிமைத் தேவைகள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின் போது, பெரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான மாற்று எரிசக்தி திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு அளித்ததற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்தார்.
--