பட்டினிச்சாவை ஏற்படுத்த திட்டமா? : காசாவில் நிகழ போகும் பெரும் ஆபத்து

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அந்த முற்றுகை நிலத்தின் வடக்கில் விரைவில் பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் உருவாகி இருப்பதாக உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

கடந்த ஜனவரி 23 ஆம் திகதி தொடக்கம் வடக்கு காசாவுக்கு உதவிகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

காசாவில் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்திருப்பதோடு பிரதான ஐ.நா. அமைப்பினால் அதனை கையாள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

உதவிகளை நாடி நிற்கும் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களுக்கு உதவும்படி மற்ற அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.

‘எந்த மாற்றமும் நிகழாத பட்சத்தில், வடக்கு காசாவில் விரைவில் பஞ்சம் ஏற்படும்’ என்று உலக உணவுத் திட்ட பிரதி நிறைவேற்று பணிப்பாளர் கார்ல் சகாவு ஐ.நா பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளார்.

பரந்த அளவில் பட்டினி நிலவும் சூழலில் கிட்டத்தட்ட பஞ்சம் ஏற்படும் சூழல் இருப்பதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா இணைப்பு அலுவலகத்தின் தலைவரான ரமேஷ் ராஜசிங்கம் எச்சரித்தார்.

வடக்கு காசாவுக்கு உதவிகள் செல்வது இஸ்ரேலிய படைகளால் தொடர்ந்து முடக்கப்பட்டிருப்பதோடு காசாவின் மற்றப் பகுதிகளுக்கு மாத்திரம் சிறிய அளவான உதவிகள் அனுமதிக்கப்படுகின்றன.

 போர் தந்திரமாக பொதுமக்களின் பட்டினியை பயன்படுத்துவதை தடுக்கும்படி பாதுகாப்புச் சபை அங்கத்துவ நாடுகளுக்கு ஐ.நா உதவிகளுக்கான தலைவர் மார்டின் கிரிபித்ஸ் கடந்த வாரம் எழுதி இருந்தார்.

‘பெப்ரவரி இறுதியில், காசா மக்கள் தொகையில் கால் பங்கினரான குறைந்தது 576,000 பேர் பஞ்சத்தில் இருந்து ஒரு அடி தூரத்தில் உள்ளனர். வடக்கு காசாவில் உள்ள இரண்டு வயதுக்கு உட்பட்ட ஆறில் ஒரு குழந்தை கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது’ என்று ராஜசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் உள்ள சுமார் 97 வீதமான நிலத்தடி நீர் மனித பயன்பாட்டுக்கு தகுதியற்றதாக இருப்பதாகவும் அங்கு விவசாய உற்பத்தி வீழ்ச்சி அடைய ஆரம்பித்திருப்பதாகவும் ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மோரிசியோ மார்டீனா எச்சரித்துள்ளார்.

எனினும் உதவிகள் தயார் நிலையில் எல்லையில் காத்திருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸின் சார்பில் பேசவல்ல ஸ்டீபன் டுஜரிக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

‘காசாவுடனான எல்லையில் உணவு விநியோகங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் காசாவெங்கும் உள்ள 2.2 மில்லியன் மக்களுக்கும் தங்களால் உணவளிக்க முடியும் என்றும் உலக உணவுத் திட்ட சகாக்களும் எம்மிடம் குறிப்பிட்டார்கள்’ என்று அவர் கூறினார்.

காசாவுக்கு செல்வதற்கு தயாராக சுமார் 15,000 மெட்ரிக் தொன் உணவுகளைச் சுமந்த சுமார் 1,000 லொறிகள் எகிப்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் காசாவுக்கு உதவிகள் செல்வதை இஸ்ரேலிய படை திட்டமிட்ட வகையில் முடக்கி வருவதாக ஐ.நா மனிதாபிமான அலுவலக பேச்சாளர் ஜேன்ஸ் லேர்க் ஜெனீவாவில் இருந்து நேற்று முன்தினம் குறிப்பிட்டார்.

உதவி வாகனங்கள் வடக்கு காசாவுக்கு செல்ல அனைத்தும் திட்டமிடப்பட்டபோதும் இஸ்ரேலிய நிர்வாகம் அண்மைய வாரங்களாக அனுமதி மறுத்து வருகிறது.

கடைசியாக கடந்த ஜனவரி 23 ஆம் திகதியே அந்தப் பகுதிக்கு உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள மக்கள் போர் சூழலுக்கு மத்தியிலும் உதவிக்காக வீதிகளில் காத்திருப்பதோடு சிறுவர்கள் வீதியில் இருக்கும் குப்பைகளிலும் உணவு தேடி வருகின்றனர்.

வடக்கு காசாவில் உணவு கிடைப்பது பெரும் போராட்டமாக மாறியிருக்கும் சூழலில் சிலர் விலங்குணவுகளை உண்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் எதிர்வரும் நாட்களில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கக்கூடும் என்று காசா சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.