சீன விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புக் குழுக்களால் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

சீனா ஈஸ்டர்ன் ஜெட் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புக் குழுக்கள் மனித எச்சங்களை கண்டுபிடித்துள்ளதாக மாநில ஊடகங்கள் கூறுகின்றன.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் விமானத்தில் இருந்த 132 பேரில் எவரும் உயிர் பிழைத்ததற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை.கடந்த திங்கட்கிழமை தெற்கு சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்திற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.ஆனால் காக்பிட் குரல் ரெக்கார்டரை (கருப்புப் பெட்டி) மீட்டெடுப்பது விபத்துக்கான காரணத்தை வெளிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.கடினமான சூழ்நிலையில் முக்கியமான கருப்புப் பெட்டிகளில் முதல் ஒன்றை நேற்று (புதன்கிழமை) தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்தன.ஆனால், கருப்புப் பெட்டி வெளிப்புறத்தில் சேதமடைந்து காணப்பட்டது. எனினும், அதன் உள் பதிவுகள் நன்றாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் தரவுகளை ஆய்வு செய்வதற்காக இது பெய்ஜிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.கனமழையால் வுஜோவில் விபத்து நடந்த இடத்தின் செங்குத்தான மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான முயற்சிகளை கடினமாக்குகிறது.நேற்று விமானத்தில் இருந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு வரத் தொடங்கினர். அவர்கள் அங்கு கண்ணீருடன் காணப்பட்டனர்.ஜனாதிபதி ஸி ஜின்பிங் இந்த துயர சம்பவம் குறித்து முழு அளவிலான விசாரணைக்கு விரைவாக உத்தரவிட்டார். துணைப் பிரதமர் லியு ஹி மற்றும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை குவாங்சி மாகாணத்தில் உள்ள கிராமப்புற மலைப்பகுதிக்கு அனுப்பினார்.குன்மிங்கில் இருந்து குவாங்ஜோ விமான நிலையத்துக்கு அந்நாட்டு உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை பகல் 1.10 மணிக்கு பயணித்த போயிங் 737 ரக விமானம் ஹூஜோ நகரத்தில் உள்ள டெங்ஷியானில் உள்ள மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.விபத்து நிகழ்வதற்கு முன்பு, 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த அந்த விமானம் 2.15 நிமிடத்தில் 9,075 அடிக்கு கீழே வந்ததாகவும் அடுத்த 20 விநாடிகளில் 3,225 அடி கீழே இறங்கி ரேடார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குளான சீன ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானத்தில் 123 பயணிகள், 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 132பேர் இருந்தனர்.