மலையக தமிழர்களை அவமானப்படுத்தியதா யாழ் நண்பர்கள் அமைப்பு..!


யாழ் - இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரனையில், யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு என்ற பெயரில், “இலங்கை வாழ் இந்தியர்களின்” 200 ஆவது ஆண்டு நிகழ்வு என்று தலைப்பிடப்பட்ட அழைப்பிதழை சமூக ஊடகங்களில் காண கிடைத்தது.

பல நாட்டு தூதரகங்களும், மலையகம் சாரா அமைப்புகளும் மலையக மக்களுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் தெரிவிப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் மலையக மக்களை சிறுமைப்படுத்தும் விதமாக “இலங்கை வாழ் இந்தியர்கள்” என்று இன்று நிகழ்ந்த நிகழ்வில் குறிப்பிடப்பட்டிருப்பதை தாம் வன்மையாக கண்டிப்பதாக மலையகத் துறை சார் வல்லுநர்கள் அமைப்பினைச் சேர்ந்த சட்டத்தரணி தம்பையா ஜெயராட்னராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் கண்டனம் வெளியிட்டுள்ள அவர்,

மலையக மக்களாகிய நாம் பல உயிர்த் தியாகங்களை செய்து, இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆணிவேராக இருந்து, உழைத்து, இந்த நாட்டினை செழுமைப்படுத்தி இருக்கின்றோம்.

நாம் இந்தியர்கள் அல்ல. மலையக மக்கள். இது எமது நாடு. நாம் இந்த நாட்டின் குடியுரிமையை பெற்றுள்ளோம். இன்னும் நமது உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

நினைவேந்தல் என்று சொல்லுக்கு பொருள் தெரியாத நபர்கள் ஏற்பாடு செய்திருக்கின்ற நிகழ்வுக்கு பேராசிரியர் பொன். பாலசுந்தரம் தலைமை தாங்குவது எம்மை வேதனைப்படுத்துகிறது.

ஏனெனில் அவர் மலையகத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கி வருபவர்.

ஆகவே இவ்வாறான நடவடிக்கைகள் மலையக மக்களை சிறுமைப்படுத்தி கேவலப்படுத்துவதோடு தாம் சார்ந்த சமூகத்தையும் இனத்தையும் அவமானப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

ஆகவே இனி வரும் காலங்களில் மலையக மக்களை புண்படுத்தாது மிகவும் நிதானத்துடன் நடக்க வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் முன் வைக்கின்றோம்.

அதாவது இலங்கைத் தமிழர்கள் என்று கூறும் போது ஈழத் தமிழர்கள் என்ற பதம் இன்று நடைமுறையில் இருக்கின்றது.

அவ்வாறு நாம் இந்தியாவிலிருந்து வந்திருந்தாலும் கூட, கடந்த 60 ஆண்டுகளாக மலையக மக்கள் என்ற சொல்லே நடைமுறையில் உள்ளது என்பதை அவதானித்து இனிவரும் காலங்களில் அவ்வாறு பயன்படுத்துங்கள்.

மலையக மக்களை புண்படுத்தாதீர்கள் - எம்மை வாழ விடுங்கள்” - என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.