மாத்தறை நீதவான் நீதிபதியின் உத்தரவை மீறி, நீதிமன்ற வளாகத்தினுள் தேசபந்து தென்னகோனின் வாகனம் நேற்று வரவழைக்கப்பட்ட சம்பவம் பெரும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழக்கு விசாரணை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
அத்துடன் சுமார் 21 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன் நேற்று நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் தனது வாகனத்தை நீதிமன்ற வளாகத்தினுள் வரவழைப்பதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
அத்துடன் மாத்தறை நீதவான் நீதிபதியும், மன்றாடியார் நாயகத்தின் வாதங்களுடன் இணக்கம் தெரிவித்திருந்தார்.
எனினும் அதனை மீறி, தேசபந்து தென்னகோனின் மெர்சிடிஸ் பென்ஸ் ரக வாகனம் நீதிமன்ற வளாகத்தினுள் வரவழைக்கப்பட்டு, அவர் ஏறிச் சென்றுள்ளார்.
நீதிமன்ற உத்தரவையும் மீறி நீதிமன்ற வளாகத்தினுள்ள தேசபந்துவின் வாகனம் நுழைந்துள்ளமை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக, மேல் நீதிமன்றில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக, பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஷ் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.