டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், முடிந்தவரை மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க டெல்லி மற்றும் மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியத் தலைநகர் டெல்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காற்று மாசு காரணமாக அரசு மற்றும் தனியார் தொடக்கப் பாடசாலைகளுக்கு நவம்பர் 6 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானம் சார்ந்த இதர பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக 'மிகவும் மோசமான பிரிவில் இருந்த காற்றின் தரம் இன்று நேற்று 'கடுமையான பிரிவுக்குச் சென்றுள்ளது. இதனால் இன்றும் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்து புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது.
காற்றின் தரக் குறியீடு (AQI) நேற்றுமுன்தினம் காலை 351 புள்ளிகளாக இருந்த நிலையில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 471 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400 புள்ளிகளைத் தாண்டி பதிவாகியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன் சிலI பெட்ரோல் மற்றும் டீசல் வகை வாகனங்கள் இயக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக டெல்லி மாநகராட்சி ஊழியர்கள் நீரை பயன்படுத்தும் நிலையில், காற்று மாசு சற்று குறையும் என கருதப்படுகிறது.
மாசு அளவு அதிகரித்து வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளை மோசமாக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.