வெலிக்கடை பொலிஸ் தடுப்பில் மரணம்: புதிய பிரேத பரிசோனைக்கு உத்தரவு

வெலிக்கடை பொலிஸில் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, மரணமானதாக கூறப்படும் சத்சர் நிமேசின் உடலில் ஏப்ரல் 23ஆம் திகதியன்று, புதிதாக பிரேத பரிசோதனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையினர் இன்று(17.04.2025) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த தகவலை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு தலைமை சட்ட மருத்துவ அதிகாரி சரியந்த அமரரத்ன, கராபிட்டிய மருத்துவமனையின் பி. ரோஹன ருவன்புர மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முதித விதானபதிரண ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட மருத்துவக் குழுவால், இந்த பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர்.

புதிய பிரேத பரிசோதனை

முன்னதாக, கடந்த 9ஆம் திகதியன்று, தமது மகனின் பிரேத பரிசோதனையிலிருந்து முடிவுகள் எதனையும் வெளிக்கொணர முடியவில்லை என்று கூறி அவரின் தாயார் ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதாக, பாதிக்கப்பட்ட தரப்புக்காக முன்னிலையான சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்தார்.

இதனையடுத்தே, உடலை தோண்டி எடுக்கவும், மூன்று நிபுணர் மருத்துவ அதிகாரிகள் குழுவால் புதிய பிரேத பரிசோதனை நடத்தவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.