காஸாவில் இளம் குழந்தைகளிடையே பரவும் மிகவும் ஆபத்தான தோல் நோய் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை


காஸா பகுதியில் இளம் குழந்தைகளிடையே மிகவும் ஆபத்தான தோல் நோய் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்களின் கால்களிலும் கைகளிலும் வெள்ளை மற்றும் சிவப்பு புள்ளிகள் தோன்றுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் இந்நோயின் நிலை தீவிர தொற்று நோயாக அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, காசாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் 150,000 க்கும் அதிகமானோர் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமாக தோல் நோய்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேநேரம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் மற்றும் ரபா நகரங்களில் இஸ்ரேலின் புதிய வெளியேற்ற உத்தரவினால் 250,000 பலஸ்தீனர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக காசாவுக்கான ஐ.நா. மனிதாபிமான இணைப்பகம் குறிப்பிட்டுள்ளது.

முற்றுகையில் உள்ள அந்தப் பகுதியின் மக்கள் தொகையில் 80 வீதமான 1.9 மில்லியன் மக்கள் தற்போது இடம்பெயர்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கான் யூனிஸ் நகரில் இருந்து இஸ்ரேலை நோக்கி பலஸ்தீன போராளிகள் ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து அந்த நகரில் இஸ்ரேல் கடந்த திங்களன்று வெளியேற்ற உத்தரவை பிறப்பித்திருந்தது.
 
இதனால் இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர்.