ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் கொல்லப்படுவதற்கு முன்பு கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் உற்சாகமாக காணப்பட்ட இறுதி வீடியோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
ஹரியானாவின் கர்னாலைச் சேர்ந்த கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கும் ஹிமான்ஷி நர்வாலுக்கும் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இளம் தம்பதி இருவரும் தங்கள் தேனிலவை கொண்டாட 3 நாள் பயணமாக காஷ்மீர் சென்றிருந்த நிலையில், தீவிரவாதிகளால் வினய் நர்வால் கொல்லப்பட்டார்.
அவரது உடல் டெல்லி விமான நிலையம் கொண்டு வரப்பட்ட நிலையில், சவப்பெட்டியை கட்டியணைத்து ஹிமான்ஷி கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைத்தது.
மேலும், ஜெய் ஹிந்த் என்று உரக்கூறி கணவனுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
திருமணமாகி ஒரு வாரம் நிறைவடையாத நிலையில், பயங்கரவாதத்தின் கோர முகத்துக்கு தனது கணவனை பறி கொடுத்த இளம் பெண்ணின் இந்த வேதனை காட்சிகள் இந்தியாவை உலுக்கியிருக்கிறது.
முன்னதாக துப்பாக்கிச்சூட்டில் கணவனை இழந்த ஹிமான்ஷி அவரது உடல் அருகே செய்வதறியாது அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி காண்போரின் மனதை உருக்கியுள்ளது.