வெல்லம்பிட்டிய - சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இன்று காலை இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று இரவு சாலமுல்ல பகுதியிலுள்ள லக்சந்த செவன தொடர்மாடி வீட்டுத் தொகுதியின் 6 ஆவது மாடியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின்போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிய வந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 39 வயதுடைய அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க அறிவித்துள்ளார்.
சமூக ஆர்வலரான டேன் பிரியசாத், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொலன்னாவை நகரசபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார்.
இதேநேரம் அநுர அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது. அதன் பிரதான சூத்திரதாரிகள் அம்பலப்படுத்தப்படுவார்கள், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டாக காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட மக்கள் போராட்டமான அரகல மீதான வன்முறை தாக்குதல் விசாரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீதான தாக்குதல் சில அரசியல் பிரமுகர்கள் உத்தரவுக்கு அமைய டான் பிரசாத் முன்னெடுத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில டான் பிரசாந்த் சுட்டுகொல்லப்பட்டுள்ளமை பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம் கட்டான பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இருதரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதன் விளைவாக, அங்கிருந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உரிமம் பெற்ற அவரது துப்பாக்கியினால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினருக்கும், மற்றொரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், மற்றைய நபர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தமது உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த கட்டானையைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர், நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காயமடைந்த நிலையில், தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.