அரசியல் செயற்பாட்டாளரும், கொலன்னாவை நகரசபைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான டேன் பிரியசாத், பாதாள உலகத்தின் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டேன் பிரியசாத்துக்கும் மேல் மாகாணத்தில் இரண்டு பாதாள உலக கும்பலை சேர்ந்தவர்களுக்கும் இடையே அதிகரித்து வந்த மோதல் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், டேன் பிரியசாத் சில காலத்திற்கு முன்பு பல பாதாள உலக நபர்களைப் பற்றி பகிரங்கமாகப் பேசியதற்காகப் பழிவாங்கும் விதமாக ஒப்பந்த அடிப்படையில் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, டேன் பிரியசாத்துக்கு குறிப்பிட்ட தரப்பினரிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் அதன் காரணமாகவே விசாரணைகள் இதனடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலக கும்பல்களில் முக்கிய நபரான கஞ்சிபான இம்ரானும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு கொண்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி இரவு கொலன்னாவை லக்சித செவன வீட்டுத் தொகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் டேன் பிரியசாத் படுகாயமடைந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். சில மணி நேரங்கள் பின்னர் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார்.
வெல்லம்பிட்டி, சாலமுல்லவில் உள்ள லக்சித செவன வீட்டுத் தொகுதியின் 6ஆவது மாடியில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் நடைபெற்ற புத்தாண்டு விருந்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள், வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து, அவர் மீது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அருகிலுள்ள சிசிரீவி காட்சிகளில், சந்தேக நபர்கள் படிக்கட்டுகளில் ஏறி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைவதையும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அவர்கள் தப்பிச் செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.
டேன் பிரியசாத் மூன்று பேருடன் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். மேலும் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
அவருடன் மது அருந்திய இரண்டு பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதுடன் மேலும் அவர்களிடமிருந்தும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த டேன் பிரியசாத்தின் சகோதரரும், 2024 ஆம் ஆண்டு கொழும்பு ஒருகொடவத்தை மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.