இந்தியாவின் மகா கும்பமேளா கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர்வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகியது.
40 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் போது, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
இதுவரை 15 கோடி பேர் வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் வரை உயிரிழந்துள்ளதோடு 100 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகத் தகவல் வெளியாகியுள்ளதுடன் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது