கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொவிட் தொற்று!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை, நலமாக உள்ளேன். வீட்டில் இருந்தே ஒன்லைன் மூலமாக தனது பணிகளை கவனித்துக் கொள்கின்றேன். மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார்.ஏற்கனவே தனது குழந்தைகளில் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்ததை அடுத்து அவர் தொலைதூரத்தில் இருந்து தனது பணியை முன்னெடுத்து வந்தார். 5 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக வியாழக்கிழமை ஜஸ்டின் கூறியிருந்தார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.இதற்கு முன்பு ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோதும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.இதனிடையே கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தலைநகர் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதையடுத்து பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ பாதுகாப்பான இடத்துக்கு வெளியேறியிருந்தார். இந்த நிலையிலேயே அவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.