அம்பலாங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த இளைஞர், நேற்று முன்தினம் கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்த குறித்த இளைஞர், பொலிஸ் நிலையத்தில் சுகவீனம் காரணமாக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று உயிரிழந்தார்.
இருப்பினும், குறித்த இளைஞனின் பெற்றோர் தங்கள் மகன் பொலிஸ் காவலில் இருந்தபோது தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொஸ்கொட பொலிஸாரிடம் வினவியபோது, குறித்த இளைஞன் அறையில் இருந்த போது மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த மாதம் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக கூறப்படும் நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் மரணம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.