வெளிகொண்டுவரப்படவுள்ள சதித்திட்டங்கள் : சிஐடியில் உள்ள மூவரை விசாரிக்க குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுமதி

இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள குற்றக்குழு உறுப்பினர்களை இன்று முதல் விசாரிப்பதற்கு மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துரே நிலங்க ஆகியோர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் உள்ளனர்.


இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட பெகோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவின் காவலில் உள்ளனர்.


இந்த இரண்டு பேரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் பல தகவல்களை வெளிக்கொணர முடிந்துள்ளது.


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் உள்ள மூவரும் அந்த விசாரணைகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால், இதுவரை அவர்களை விசாரிக்க வாய்ப்பு இல்லாததால் பல விசாரணைகளின் வேகம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்த நிலைமை குறித்து பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாக, மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு சந்தேக நபர்களை விசாரிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் 'பஸ்தேவா' என்பவரை பயங்கரவாதத் தடை ச்சட்டத்தின் கீழ் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்படுவார் என மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


இதனிடையே கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாணந்துறை நிலங்கவின் வங்கிக் கணக்குகள் குறித்த அறிக்கைகளைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு கொழும்பு நீதவான் நீதமன்றம் அனுமதியளித்துள்ளது.


குற்றப் புலனாய்வு பிரிவினரின் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த சந்தேக நபருக்கு சொந்தமான இரண்டு வங்கிக் கணக்குகள் மூலம் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சந்தேக நபரால் செய்யப்பட்ட பிற குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளைத் தொடர இந்த வங்கிக் கணக்குகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகள் தொடர்பில் விசாரிப்பது அவசியம் என குற்றப் புலனாய்வு பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதவான், சந்தேக நபரின் கணக்குகள் குறித்த அறிக்கைகளை வழங்குமாறு இரு வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.