கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த கப்பல் - இழப்பீடு வழங்க மறுக்கும் நிறுவனம்



எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பல் நிறுவனம் மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் பயணித்த போது சிங்கப்பூருக்கு சொந்தமான எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றுதலுக்கு உள்ளானது.

இதனால் நாட்டின் கடல் வளம் பாரிய அளவில் மாசடைந்ததுடன், கடல் வாழ் உயிரினங்களும் இறந்து கரை ஒதுங்கியிருந்தன. அத்துடன் கடல் வளமும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது.

 கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நைட்ரிக் அமிலம் கசிந்ததன் காரணமாகவே எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டதாகச் சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தி இருந்தார்.


இந்நிலையில் அதற்குரிய இழப்பீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும் என அந்த கப்பலின் நிறுவனமான X-Press Feeders நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் அந்த இழப்பீட்டை செலுத்துவதற்கு குறித்த நிறுவனம் மறுப்பு வெளியிட்டு உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.