தலைநகர் கொழும்பில் பல பகுதிகளில் வழமையை விட பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பான விளக்கத்தை இராணுவத் தலைமையகம் கூறியுள்ளது.
அதாவது, அவசர நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் முப்படையினருக்கு பயிற்சி வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படையினர் பயிற்சிக்கான ஒத்திகையில் மாத்திரம் ஈடுபட்டுள்ளதாகவும், எந்தவித கடமை நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவசர நேரங்களில் காவல்துறையினருக்கு கடமை ரீதியில் உதவும் வகையில் இராணுவத்தினருக்கு இவ்வாறு பயிற்சிகள் வழங்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சிகள் முடிவடையும் இறுதி திகதியை கூற முடியாது எனவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி முதல் கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காவல்துறையினருடன் இணைந்து இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            