கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பால் ஈர்க்கப்பட்டது: என்.ஐ.ஏ தகவல்


தமிழகம் கோயம்புத்தூர் சிற்றூந்து குண்டுவெடிப்பு சம்பவம், இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பால் ஈர்க்கப்பட்ட சம்பவம் என்று இந்திய தேசிய புலனாய்வு பிரிவான என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் ஜமீஷா முபின், தனது தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கியதாரி சஹ்ரான் ஹாஷிம் செய்ததைப் போன்ற பிரியாவிடை காணொளியாக வெளியிட்டிருந்தார்.

எனினும் முபின், தான் ஒரு ஷஹீத் என்ற தியாகியாக விரும்புவதாக கூறியிருந்தார் அதற்காக தொகுதி காணொளியை வெளியிட அவர் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது. எனினும், அது நடக்கவில்லை என்றும் என்.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த அக்டோபரில் கோவை சங்கமேஸ்வரர் கோவில் முன்னால் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சஹ்ரான் ஹாசிம் என்பவரால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதை என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.

இதுவரை குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட 12 பேர் ஹாஷிமால் ஈர்க்கப்பட்டு தீவிரமயமாக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இவர்களின் செயற்பாட்டில் வெளியாரின் தொடர்புகள் குறித்த தகவல்கள் இன்னும் என்.ஐ.ஏ கண்டறியப்படவில்லை என்று தெ ஹிந்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.