இஸ்ரேலுக்கு ஆதரவளித்த இரு தனியார் நிறுவனங்களுக்கு தடையுத்தரவு! துருக்கி அதிரடி

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதால் கோகோ கோலா மற்றும் நெஸ்லே தனியார் நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு துருக்கி நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், துருக்கி நாடாளுமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் தேநீர் விடுதிகளில் இஸ்ரேலை ஆதரிக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள் இனிமேலும் விற்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற சபாநாயகர் நுமன் குர்துல்மஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை அடுத்தே, நாடாளுமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற தரப்பில் கூறப்படுகிறது.

இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதலுக்கு, எதிராக கடந்த ஒரு மாதமாகவே லட்சக்கணக்கான துருக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

துருக்கி அரசாங்கமும் இந்த தாக்குதலுக்கு கடுமையான விமர்சனத்தையும் கண்டிப்பையும் வெளிப்படுத்தி வருகின்றது.

இந்நிலையிலேயே, குறித்த நிறுவனங்களுக்கும் இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தடையுத்தரவு குறித்து இரு தனியார் நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த இரு தனியார் நிறுவனங்களும் இது தொடர்பில் எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.