செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுகளின் இடைக்கால அறிக்கையைக் கடந்த 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா கடந்த 10 ஆம் திகதி கட்டளை ஒன்றை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்பான இடைக்கால அறிக்கையும், நீல நிறப் புத்தகப் பையுடன் மீட்கப்பட்ட சிறுவரின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு மன்று அறிவித்திருந்த நிலையில் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவினுடைய அறிக்கையும், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினுடைய அறிக்கையும் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
இது தொடர்பான சுருக்கமான விபரங்கள் மன்றுக்கு நீதிவானால் வெளிக்கொணரப்பட்டன.
ராஜ் சோமதேவவின் அறிக்கையில் முக்கியமாக மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் முதலாவதாகச் செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன எனத் தாம் கருதுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்யப்படுவது போன்று புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் காணப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான மேலதிக ஆய்வுகள் தேவை, போன்ற முக்கியமான மூன்று விடயங்கள் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இதேவேளை யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிப்பதாகச் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று இடம்பெற்றபோது, செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 65 என்புக் கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன எனவும்,
'தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 01' இல் இருந்து 63 என்புத் தொகுதிகளும், 'தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 02' இல் இருந்து இரண்டு என்புத் தொகுதிகளும் என மொத்தமாக 65 என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன எனவும், நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா மன்றில் வெளிப்படுத்தினார்.
இதன்போது செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்திலிருந்து காலையில் 2 சட்டத்தரணிகள், மாலையில் 2 சட்டத்தரணிகள் என்று கிரமமாக அகழ்வுப் பணிகளில் முன்னிலையாக மன்றில் அனுமதி கோரிய நிலையில் நீதிமன்றம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
மேலும், ஊடகவியலாளர்கள் மற்றும் அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் விசேட நிபுணர்கள் மாத்திரமே அகழ்வுப் பணிகளைப் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதித்திருப்பதாகவும் மன்றில் நீதிவானால் அறிவிக்கப்பட்டது.
புதைகுழியில் கண்டெடுக்கப்படும் சான்றாதாரங்கள் சம்பந்தமாகத் தேவையற்ற கட்டுக்கதைகளையும், பொருள்கோடல்களையும், விசனங்களையும் மக்கள் மத்தியில் தவறாகக் கொண்டு செல்லாமல் தடுப்பதற்காகவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் மன்றில் அறிவிக்கப்பட்டது.
மேலும் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிப்பதாகச் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றுக்கு அறிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பான அடுத்த தவணை எதிர்வரும் ஒகஸ்ட் 6ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.