ரஸ்ய உக்ரேனுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தை பாரிய சர்ச்சையில் முடிவடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பு கடுமையான வார்த்தை மோதல்களில் முடிந்து உள்ளது.
இதனையடுத்து பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமலும் வெள்ளை மாளிகையில் நடந்த விருந்தில் பங்கேற்காமலும் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ட்ரம்ப் கடுமையாக சாயுள்ளார்,
நீங்கள் இலட்சக்கணக்கான உயிர்களோடு விளையாடுகிறீர்கள்? நீங்கள் இந்த நாட்டை அவமதிக்கிறீர்கள்; 350 பில்லியன் டொலர்களை அமெரிக்கா உங்களுக்காக செலவு செய்தது என ட்ரம்ப் கடுந்தொனியில் சாடியுள்ளார்.
உங்கள் வீரர்கள் அமெரிக்க போர் கருவிகளை வைத்தே சண்டையிட்டனர். அது மட்டும் இல்லை என்றால் போர் ஒரு வாரத்தில் முடிந்திருக்கும்.
ரஷ்யா உடன் போரில் உக்ரேன் வெல்லப்போவதில்லை. உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியால் 3ம் உலக போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது என நேரடியாக கடுந்தொனியில் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பேச்சுவார்த்தையின் போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உங்கள் நாட்டில் ஆண்கள் இல்லை என ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு அமெரிக்காவின் துணை ஜனாதிபதியை அழைத்துள்ளார்.
இந்நிலையில், டிரம்ப்-ஜெலென்ஸ்கி-வான்ஸ் இடையிலான வார்த்தை மோதலுக்கு பிறகு ஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர்.
போலந்து பிரதமரும், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவருமான டொனால்ட் ட்ஸ்க் டுவிட்டர் தளப் பதிவில், “உக்ரேன் தோழர்களே, நீங்கள் தனியாக இல்லை” என பதிவிட்டுள்ளார்.
போர்ச்சுகலில் இருந்து புறப்பட்ட போது, ட்ரம்ப்-ஜெலென்ஸ்கி வார்த்தை மோதல் நிகழ்வு குறித்து பதிலளித்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ரஷ்யா தான் ஆக்கிரமிப்பாளர், உக்ரேன் மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிட்டார்.
மேலும், 3 வருடங்களாக ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்ததிலும், உக்ரேனுக்கு உதவியதிலும் நாங்கள் அனைவரும் சரியாக இருந்தோம், இதனை தொடர்ந்து செய்வதும் சரி தான் என்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் கண்ணியம், உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்காக தொடக்கத்தில் இருந்து போராடுபவர்களை மதிப்பது முக்கியம் என்றும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.